சோதனையில் 500 கிலோ பிண ரசாயனம் தடவிய மீன்கள்! 100 கிலோ அழுகிய மீன்கள்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!



chemical mixing in fish


தமிழகம் முழுவதும் மார்க்கெட்டில் விற்கக்கூடிய மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் கலந்து விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில், கோவை, உக்கடம் மாா்க்கெட் மற்றும் நகரிலுள்ள மீன் விற்பனை நிலையங்களில் மீன்வளத் துறை துணை இயக்குநா் ஆா்.ரவிச்சந்திரன் தலைமையில் மீன்வளத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். 

அந்த ஆய்வில் உக்கடம் மாா்க்கெட் உட்பட பல்வேறு இடங்களில் அழுகிய மீன்கள் மற்றும் மீன்கள் கெட்டுப்போகமால் இருக்க ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு அழுகிய மீன்கள், ரசாயனம் தடவிய மீன்கள் என மொத்தம் 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

fish

அதேபோல், நேற்று கடலூர் மீன்வளத் துறை துணை இயக்குனர் தலைமையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் முதுநகரில் உள்ள மீன் மார்க்கெட், முதுநகர் மீன் அங்காடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அதில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவது இல்லை என்பது தெரிய வந்தது.

ஆனால், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகர் மீன் மார்க்கெட் வெளிப்புறத்தில் சுமார் 100 கிலோ அழுகிய மீன்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, இதுபோன்ற மீன்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.