கேடி காதலனும், கில்லாடி காதலியும்.. ரூ.12 இலட்சம் அபேஸ்.. சொகுசு காதல் புறாக்கள், கம்பி வைத்த சிறையில் அடைப்பு.!



chennai-arumbakkam-girl-cheating-arrest-with-lover

தாய் வேலைபார்த்துவரும் வீட்டின் உரிமையாளரிடம் ரூ.12 இலட்சம் திருடிய இளம்பெண், காதலருடன் சேர்ந்து உல்லாசமாக ஊரை சுற்றிவந்து அம்பலமானது. காதல் ஜோடியை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னையில் உள்ள அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் ஆவார். இவரின் மகன் அகஸ்டின் (வயது 58). அகஸ்டினின் மனைவி ஷீலா (வயது 53). அகஸ்டினின் தந்தை வயது மூப்படைந்து இருந்ததால், அவரை கவனிக்க அரும்பாக்கம் பெருமாள் கோவிலை சேர்ந்த வளர்மதி (வயது 50) என்ற பெண்ணை பணிக்கு அமர்த்தியுள்ளனர். 

கடந்த 15 வருடமாக வளர்மதி ஜானை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதியன்று தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க அகஸ்டின் சென்றுள்ளார். அப்போது, அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12 இலட்சம் பணம் வேறொருவர் வங்கிக்கணக்கிற்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை என 4 மாதங்களுக்குள் பரிமாற்றம் செய்யப்பட்டது அம்பலமானது. 

இதனையடுத்து, விஷயம் குறித்து அகஸ்டின் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடத்திய காவல் துறையினர் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக்கணக்கை வைத்து கே.கே நகர் சிவலிங்கபுரத்தை சேர்ந்த சதீஷ் குமார் (வயது 31) என்பவர் மோசடி செய்துள்ளதை உறுதி செய்துள்ளனர். 

chennai

இதுதொடர்பாக அகஸ்டினிடம் நடந்த விசாரணையில், வளர்மதி வேலைக்கு வந்துசெல்லும் போது மகள் சுமித்ராவையும் (வயது 19) உடன் அழைத்து வருவது வழக்கம். அவர் ஜான் மற்றும் ஷீலாவின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார் என்பது உறுதியானது.

இதனையடுத்து, வளர்மதியிடம் விசாரணை நடத்தியபோது, சுமித்ரா ஜானின் செல்போனில் இருந்து அவருக்கே தெரியாமல் ரூ.12 இலட்சம் பணத்தை காதலன் சதீஷ் குமாரின் வங்கிக்கணக்கு பரிமாற்றம் செய்து தலைமறைவானது தெரியவந்தது.

பின்னர், சைபர் கிரைம் காவல் துறையினரின் உதவியுடன் பாண்டிச்சேரியில் இருந்த காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் காதல் ஜோடியின் கேடித்தனம் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் ரொக்கம், இரு சக்கர வாகனம், 3 சவரன் நகைகள் மற்றும் 4 செல்போன்களை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.