மாமூல் தரமறுத்த வியாபாரி முகத்தில் கீறல்.. 35 தையல்..! சேலையூர் பயிற்சி உதவி ஆய்வாளர் வெறிச்செயல்.!



Chennai Tambaram Selaiyur Police Station Sub Inspector Suspended

பூக்கடை வியாபாரியிடம் இலஞ்சம் கேட்ட காவல் உதவி ஆய்வாளர், பூக்கடை வியாபாரியை தாக்கியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். 

சென்னையில் உள்ள தாம்பரம் சானடோரியம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (வயது 50). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பாரதமாதா சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். பூக்கடைக்கு அருகேயே சேலையூர் காவல் நிலைய உதவி மையம் உள்ளது. கடந்த 19 ஆம் தேதி வெங்கடேசன் பூக்கடையில் இருந்த நிலையில், சேலையூர் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் மணிவண்ணன் பூக்கடைக்கு வந்துள்ளார். 

இந்த இடத்தில் பூக்கடை நடத்த கூடாது என வெங்கடேசனிடம் கூறிய நிலையில், பூக்கடையை தொடர்ந்து நடந்த ரூ.200 மாமூல் தினமும் தர வேண்டும். பணம் தர மறுப்பு தெரிவித்தால் கடையை நடத்த விடமாட்டோம் என்றும் மிரட்டி இருக்கிறார். நானே இந்த கடையை வைத்து தான் குடும்பம் நடத்தி வருகிறேன். என்னிடம் தினமும் ரூ.200 கேட்டால் எப்படி? என்று தன்னிலையை கூறி வெங்கடேசன் அழுதுள்ளார். இதனை கண்டுகொள்ளாத மணிவண்ணன், வெங்கடேசனிடம் சண்டையிட்டு நாளை பணம் தர வேண்டும் என்று கூறி சென்றுள்ளார்.

மறுநாள் கடைக்கு சென்ற மணிவண்ணன் வெங்கடேசனிடம் பணம் கேட்ட நிலையில், அவர் மீண்டும் தன்னிலையை கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன் மாமூல் கொடுக்காமல் கடையை எப்படி நடத்துவாய்? என்று கூறி பூக்களை சாலையில் வீசி இருக்கிறார். வெங்கடேஷ் காவலரை தடுக்க முயற்சித்த போது, சிறிய கத்தியை வைத்து மணிவண்ணன் வெங்கடேசனின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். 

chennai

முகம் முழுவதும் இரத்தம் வெளியேறிய நிலையில் வெங்கடேஷ் அலறித்துடிக்க, மணிவண்ணன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் வெங்கடேசனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

வெங்கடேசனின் முகத்தில் 35 தையல்கள் போடப்பட்ட நிலையில், சேலையூர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க சென்றுள்ளார். சேலையூர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் புகாரை ஏற்ற மறுப்பு தெரிவிக்கவே, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த காவலர் மீண்டும் சேலையூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற ஆணையர் ரவி விசாரணை நடத்தி சேலையூர் காவல் நிலைய பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து பிற காவலர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.