சென்னை திருமலா திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி! விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்!
தமிழக அரசின் உத்தரவின்படி நேற்று அனைத்து கோவில்களும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 5மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பல கோவில்களில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
இந்தநிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்களின் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை கணக்கிடுதல், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகுதான் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் பிரசாதம் அளிக்கப்படாது எனவும் பூஜைக்காக பூ, தேங்காய் போன்றவற்றையும் பக்தர்கள் கொண்டு வர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.