மனைவி இருக்க கொழுந்தியாளை திருமணம் செய்ய ஆசைப்பட்டு கடத்திய எஸ்.ஐ பணிநீக்கம் : கோவையில் சம்பவம்.!
அன்பான மனைவி, 2 குழந்தைகள் இருக்க கொழுந்தியாள் மீது ஆசைப்பட்ட மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வேலையை இழந்த சோகம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பகூடல் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம் (வயது 35). இவரின் மனைவி சத்யா (வயது 24). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். வெங்கடாசலம் கடந்த 2018-ல் இருந்து கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு பிரிவில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வெங்கடாசலத்திற்கு தனது மனைவியின் தங்கையை மணம்முடிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பி.எட் வரை படித்துள்ள மனைவியின் தங்கையான கொழுந்தியாளை மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என அழைத்து சென்று மனைவியுடன் காரில் புறப்பட்டு பயணம் செய்துள்ளார். மதுரைக்கு முன்பு இருக்கும் சோதனைச்சாவடியில் சத்யாவை கீழே இறக்கிவிட்டு வெங்கடாசலம், கொழுந்தியாளை கடத்திக்கொண்டு மதுரைக்கு விரைந்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன சத்யா காவல் துறையினரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சுதாரித்த காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியிலேயே கைது செய்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த வெங்கடாசலம் மீண்டும் பணியில் சேர்ந்தாலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், கோவை சரக டி.ஐ.ஜி ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட வெங்கடாசலத்தை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.