கஜா புயல்: சோறு போட்ட தென்னை மரங்கள் சாய்ந்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை



farmers suicide because of Gaja

கடந்த 16ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய காஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெல், முந்திரி மற்றும் பலவகை மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்தன. அந்த மரங்களை வெட்டி சுத்தம் செய்து மீண்டும் பயிர்களை நட்டு வருமானம் பார்ப்பதற்கு குறைந்தது இன்னும் ஐந்து வருடங்களாவது ஆகும்.

பெரும்பாலும் விவசாயிகள் கடன்களை வாங்கி தான் பயிரிடுவர். பின்பு அறுவடை முடிந்த பிறகு கடன்களை அடைத்து மீதமுள்ள தொகையை தங்களது குடும்ப செலவிற்காக வைத்துக் கொள்வர். ஆனால் இப்பொழுது கஜா புயலால் பயிர்கள் அனைத்தும் முழுவதும் சேதம் அடைந்ததால் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் பெரும் சிக்கல் உண்டாகும். கடன்காரர்கள் வீட்டிற்கு வந்தால் என்ன பதில் சொல்வது என்பதை தெரியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். 

farmers suicide

அரசு எவ்வளவுதான் நிவாரண நிதி கொடுத்தாலும் அந்த நிதியானது சேதமடைந்த பயிர்களை சுத்தம் செய்து புதிதாக பயிரிடுவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இந்நிலையில் அடுத்த ஐந்து வருடங்கள் குழந்தைகளின் படிப்பு, திருமணம் மற்றும் இதர செலவுகளுக்காக  விவசாயிகள் என்ன செய்யப் போகிறார்கள்? இதையெல்லாம் நினைத்துப்பார்த்து தான் கஜா புயலில் சுமார் 5 ஏக்கர் தென்னை மரங்களை இழந்த விவசாயி சுந்தர்ராஜன்  விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தஞ்சை மாவட்டம்  சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன்  தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்திருந்தார்.  கஜாவின் ஆட்டத்தால் இந்த மரங்கள் அனைத்தும் தரையில் சாய்ந்தன. இதனால் மனமுடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

farmers suicide

தனது கணவரின் சடலத்தை பார்த்து தேம்பி அழுத, சுந்தர்ராஜனின் மனைவி, “என் கணவர் அவரின் பிள்ளைகள் போல தென்னை மரங்களை பார்த்துக் கொண்டார்.  மரங்கள் சாய்ந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரவு முழுவதும் அதை நினைத்து நினைத்து அழுதுக்கொண்டிருந்தார்” என்று கூறியுள்ளார்.

இதே போல், தஞ்சை கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி  சிவாஜியின் வீடு மற்றும் தென்னந்தோப்பு ஆகியவை  கஜா புயலினால் சேதம் அடைந்தது. இந்த  துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார்.  தஞ்சையில் இந்த இரண்டு விவசாயிகளின் மரணமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.