#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கஜா: “மின்சார வாரியத்திற்கே மின்சாரம் வழங்கிய இளைஞர்கள்" - குவியும் பாராட்டு!
'கஜா' என்ற வார்த்தை என்னவோ எல்லோருக்கும் ஒரு செய்தியாக மட்டுமே தோன்றலாம். ஆனால் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு தான் தெரியும் 'கஜா' என்ற வார்த்தை தங்கள் வாழ்க்கையையே அழித்த அசுரன் என்று.
"எல்லாத்தையும் அழிச்சிட்டு என்ன மட்டும் ஏன் உசுரோட வெச்சிருக்கு.. இனிமேல் இதெல்லாம் சரி பண்ணி வாழ்ரதுக்கு பதிலா செத்துரலாம்" இந்த வரிகள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தில் 2000 வாழைமரங்கள், 500 தென்னை மரங்களை இழந்த ஒரு பெண் விவசாயியின் குரல். இந்த வார்த்தைகளை கேட்டு உறைந்து போன எங்களுக்கு இளநீர் வெட்டி கொடுக்க சொன்னார் அந்த பெண் விவசாயி.
அடுத்தது, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீழப்பட்டி ராசியமங்களம் கிராமத்திலிருந்து சென்னை மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் இளைஞர்கள் தங்களுடைய கையிலிருந்தும், உடன் வேலை பார்க்கும் ஊழியர்களும் சேர்ந்து மின்சாரமின்றி குடிநீருக்காக சிரமப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்காக நிதி திரட்டி ரூ.75000க்கு ஜெனரேட்டர் வாங்கியுள்ளனர்.
இதற்கு தலைமையேற்ற பெயர் வெளியிட விரும்பாத அந்த இளைஞர் பேசுகையில், "நான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த சனிக்கிழமை எனக்குள் ஒன்று தோன்றியது; "சென்னையில் புயல், வெள்ளம் வந்த போதெல்லாம் நம் ஊர்க்கார்கள் நமக்கு நிவாரணப் பெருட்கள் அனுப்பி வைத்தார்கள், நமது ஊரில் இன்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நம் இரத்த சொந்தங்களுக்கு யார் உதவி செய்யப்போவது என்று! அப்போது தோன்றியது 'நமக்கு இல்லாத பொறுப்பு வேறு யாருக்கு வரும் என்று', உடனே என்னைப்போல் சென்னையில் வேலைப்பார்த்து வரும் என் நண்பர்களை தொடர்பு கொண்டேன். அவர்களும் கண்டிப்பாக நமது ஊர் மக்களுக்கு ஏதேனும் வாங்கி செல்ல வேண்டும் என்று கூறினர்.
அதற்கான நிதியை திரட்ட என்ன செய்யலாம் என்று யோசித்தோம். உடனே உதயமானது ஒரு வாட்ஸ்-ஆப் குரூப். எங்கள் ஊரிலிருந்து சென்னை மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைவரையும் அந்த குரூப்பில் இணைத்தோம். அவர்கள் அனைவரும் தங்கள் கும்பத்தாரிடம் தொடர்புகொள்ள முடியாமல் தவித்தது தெரிய வந்தது. இருப்பினும் நிதி உதவி அளிப்பதாக முன் வந்தனர். பின்னர் ஊர் மக்களுக்கு காய்கறிகள் வங்கி செல்லலாமா என யோசித்தோம். அந்த சமயத்தில் நல்ல வேளையாக முதல்முறையாக ஊரில் இருந்த என் நண்பனை தொடர்புகொள்ள முடிந்தது. அப்போது அவன் கூறிய ஒரே வார்த்தை 'தண்ணீர்'.
இப்போதைக்கு தண்ணீர் மட்டும் இருந்தால் போதும் என்பதை உணர்ந்தோம். அதையும் நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என முடிவு செய்தோம். எங்கள் ஊரில் ஆழ்துளை கிணறுகள் மட்டுமே நீர் ஆதாரம். மின்சாரம் இல்லை என்றால் அவ்வளவு தான். அதைப்போக்க ஒரே வழி ஜெனரேட்டர் தான் என்ற முடிவிற்கு வந்தோம். அதனை வாங்க பணம் அதிகம் தேவை என்பதால் நாங்கள் சோர்வடையவில்லை. எங்களுடன் வேலைப்பார்க்கும் சக நண்பர்களை தொடர்பு கொண்டோம். அவர்களும் நிதிதிரட்டி தருவதாக முன்வந்தனர்.
பின்னர் கரூரில் பயன்படுத்திய ஒரு ஜெனரேட்டர் விற்பனைக்கு இருப்பதை தெரிந்துகொண்டோம். 5 பேர் கொண்ட எங்கள் அணி சனிக்கிழமை இரவே கரூருக்கு புறப்பட்டது. ஊரிலிருந்து 3 பேர் ஜெனரேட்டர் எடுத்துசெல்ல வண்டி எடுத்துகொண்டு இரவே கரூருக்கு கிளம்பினர். காலையில் கரூரை அடைந்த நாங்கள் 10 மணிக்கு ஜெனரேட்டரை ஏற்றிக்கொண்டு ஊருக்கு அதே வண்டியில் கிளம்பினோம்.
மாலை 4 மணிக்கு நாங்கள் ஊருக்குள் நுழைந்ததும் மழை எங்களை வரவேற்றது. அடுத்த அரை மணி நேரத்தில் ஊர் நடுவே இருக்கும் ஆழ்துளைகிணற்றில் இருந்து தண்ணீர் வர தொடங்கியது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடங்களை எடுத்துக்கொண்டு ஓடி வந்தனர். அன்று முதல் இன்று வரை மக்களின் தாகத்தை தீர்க்கிறது அந்த ஜெனரேட்டர்" என்று கறிய அவர் இதற்காக நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைக் கூறிகொண்டார்.
இதில், சிறப்பம்சம் என்னவெனில் கீழப்பட்டி ராசியமங்களம் கிராமத்தில் பழுதாகியிருக்கும் மின்கம்பங்களை சரி செய்ய வந்துள்ள ஊழியர்கள் அனைவரும் அங்குள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊர் மக்கள் உணவு தயார் செய்து கொடுத்து வருகின்றனர். அதற்கு தேவையான தண்ணீர் அந்த ஜெனரேட்டர் மூலம் தான் எடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கான இப்போதைய உடனடி தேவை ஜெனரேட்டரை இயக்க டீசல், அதற்கான நிதி உதவி. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
தொடர்புக்கு: 7904925592, 6369655017, 6379798522