தலைக்கவசம் அணியாமல் சென்ற போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை! போக்குவரத்து பிரிவு அதிரடி



higher police not wearing helmat

சென்னை அருகே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துப் பிரிவு மேற்கு மண்டல துணை ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஓட்டுபவரும், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறதா என சென்னை உயர் நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது. 

பொதுமக்கள் மட்டுமின்றி, தமிழக காவல்துறையிலும் அனைவரும் இந்த விதிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என டிஜிபி அண்மையில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், எஸ்.ஆர்.எம்.சி., போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் பாலு என்பவர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனைப் பார்த்த உயர் அதிகாரிகள், அந்தக் காட்சியின் உண்மைதன்மை குறித்து விசாரிக்க உத்தரவிட்டனர். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் சிறப்பு காவல்  உதவி ஆய்வாளர் பாலு, கடந்த செவ்வாய்க்கிழமை  தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச்சென்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாலுவை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துப் பிரிவு மேற்கு மண்டல துணை ஆணையர் எஸ்.லட்சுமி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.