முல்லை பெரியாறு அணையை உடைக்க கையெழுத்து இயக்கமா?: தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு..!



Kerala have signed a movement urging the demolition of the Mullai Periyar Dam

முல்லை பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரள மாநிலத்தில் சில அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பத்து நாட்களாக ‘சேவ் கேரளா பிரிகேட்’ என்ற தனியார் அமைப்பு கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பத்து லட்சம் கையெழுத்துக்கள் பெற்று பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ளதாக அதன் நிறுவனர் ரசல் ஜோய் தெரிவித்துள்ளார். பலமாக உள்ள பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி பிரசாரம் செய்யும் அமைப்பின் போக்கை தமிழக விவசாயிகள் கண்டித்துள்ளனர்.

பெரியாறு அணை பலமாக உள்ளது என்று கடந்த 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் செய்யப்படும் பிரசாரத்திற்கு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பு இந்த முறைகேடானபிரசாரத்தை தடுக்க வேண்டும். தவறினால் தேவிகுளம், பீர்மேடு, உடுப்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை துவக்குவோம் என்று விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.