#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆலங்குடியில் மின்கம்பத்தில் மோதி தடம் புரண்ட டிப்பர் லாரி; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்..!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று நள்ளிரவில் அதிவேகமாக வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென மின்கம்பத்தில் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் அரசமரம் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பகுதியில் பகல் நேரத்தில் அதிகமாக மக்கள் கூடும் இடம் ஆகும். இந்த சாலையின் ஓரத்திலே ஒரு மின் கம்பமும் மின் மாற்றியும் அருகருகே உள்ளது.
நேற்று நள்ளிரவில் வெட்டன்விடுதி பகுதியில் இருந்து ஒரு டிப்பர் லாரி அதி வேகமாக வந்துள்ளது. நள்ளிரவு என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் ஏதும் இல்லை. வேகமாக வந்த வண்டி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த வண்டியானது சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
மோதிய அந்த டிப்பர் லாரி அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களின் மேல் ஏறி அடுத்து இருந்த மின் மாற்றியின் ஓரமாக உள்ள கழிவு நீர் கால்வாயில் இறங்கியது. மின் மாற்றியில் மோதாமல் மயிரிழையில் தப்பியதால் ஓட்டுனருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின்மாற்றியின் மீது வண்டி மோதியிருந்தால் கண்டிப்பாக பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும்.
இதனை அறிந்த ஆலங்குடி காவல்துறையினரும், போக்குவரத்து காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வாரியத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. நள்ளிரவு என்பதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
இதனால் இன்று காலை இரண்டு பளு தூக்கும் இயந்திர வண்டிகள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். மின் வாரிய ஊழியர்களும் மீட்பு பணிக்கு உதவிய மின் கம்பிகளை துரிதமாக அகற்றினர். அருகில் இருக்கும் மின்மாற்றிக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் இருக்க வேண்டி மீட்பு பனி மிகவும் கவனமுடன் நடத்தப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு டிப்பர் லாரியானது கால்வாயிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. மின்மாற்றிக்கும் எந்த வித சேதாரமும் ஏற்படவில்லை.
முதலில் வண்டி மோதிய மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீட்பு பனி நடந்த சமயத்தில் ஆலங்குடி முதல் புதுக்கோட்டை செல்லும் சாலையில் பலத்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை ஆலங்குடி போக்குவரத்து காவல்துறையினர் சரிசெய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.