எதார்த்தமாக சிக்கிய லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்தவன்! மற்றொரு கொள்ளையன் யார் தெரியுமா?



police catch lalitha jewllery theft

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன் வியாபாரம் முடிந்ததும் இரவில் ஊழியர்கள் கடையின் ஷட்டரை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஊழியர்கள் வழக்கம்போல் வந்து கடையை திறந்தனர். கடையின் உள்ளே சென்ற அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

லலிதா ஜூவல்லரியில் சுவற்றை துளைப்போட்டு கீழ் தளத்தில் உள்ள தங்கம், டைமண்ட் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிப்பதற்கு 7 இன்ஸ்பெக்டர்களை கொண்ட  தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். 

ஆரம்பத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களில் ஒருவன் சிக்கியுள்ளார். 

lalitha jewellery

திருவாரூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான நபரிடம் சோதனை செய்தனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் இருந்து 5 கிலோ தங்கம் சிக்கியது. அந்த தங்கத்தின் பார் குறியீட்டை சோதனை செய்ததில், கொள்ளை போன லலிதா ஜூவல்லரி கடையின் நகைதான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். 

சிசிடிவி காட்சியில் இருவர்கள் கொள்ளை அடித்த நிலையில், தற்போது அதில் ஒருவன் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மற்றொருவரை  தேடும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். தப்பியோடியவர் சீராத்தோப்பு சுரேஷ் என்பவர் தெரியவந்தது. அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தப்பியோடிய சுரேஷின் உறவினரான முருகன் அகில இந்திய அளவில் பிரபலமான கொள்ளையன் என்பது குறிப்பிடத்தக்கது.