வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு பூஜை செய்த போலீஸ்காரர் குடும்பம்!.. நரபலி கொடுக்க திட்டமா..?!
திருவண்ணாமலை மாவட்டம், தசராபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி (55). இவர் ஒரு நெசவு தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இந்த தம்பதியினருக்கு பூபாலன், பாலாஜி என்ற 2 மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கோமதிக்கு திருமணம் ஆகிவிட்டது. கோமதியின் கணவர் அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ். பூபாலன் சென்னை, தாம்பரம் காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், இவர்கள் 6 பேரும் கடந்த 3 நாட்களாக வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மாந்திரீகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பூபாலன் வீட்டில், நேற்று காலை முதல் வீட்டின் கதவை திறக்காமல் மந்திரம் மட்டும் ஓதிக்கொண்டு இருப்பதாக அக்கம்பக்கத்தோர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் ஜெகதீசன், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளே இருந்தவர்களை வெளியே வரும்படி கூறினார்கள். எங்கள் பூஜையை தடை செய்ய வேண்டாம். நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று வீட்டிற்குள் இருந்தவர்கள் பதிலளித்தனர். இதன் பின்னார் சுமார் 5 மணி நேரம் அவர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் இருந்தனர்.
நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் வெளியே வராததால், பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து கதவை உடைத்த காவல்துறையினர் வீட்டின் உள்ளே இருந்த 6 பேரையும் மீட்டனர். வெளியில் வந்த பின்பு, கோமதிக்கு பேய் பிடித்திருப்பதாகவும் அதனால் பேயை விரட்ட பூஜை நடத்தி வருவதாகவும் கூறினர். மேலும் இந்த பூஜையின் இறுதியில் அவர்கள் நரபலி கொடுக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே காவல்தூறையினரும், தீயணைப்புத்துறையினரும் வீட்டின் உள்ளே பூஜை நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை வெளியே கொண்டு வந்து கொளுத்தினர். மேலும் மீட்கப்பட்ட ஆயுதப்படை காவலர் பூபாலன் உள்ளிட்ட 6 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.