அர்ச்சனை செய்யவந்த பெண்ணை அறைந்த அர்ச்சகருக்கு என்ன தண்டனை தெரியுமா?
சிதம்பரத்தை சேர்ந்த செல்வகணபதி என்பவரின் மனைவி சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாளுக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அர்ச்சனை செய்வதற்கு சென்றுள்ளார். அவர் அங்கிருந்த அர்ச்சகர் தர்ஷனிடம் தேங்காயை கொடுத்து மகன் பேரில் அர்ச்சனை செய்யுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அர்ச்சகர் அர்ச்சனை ஏதும் செய்யாமல் தேங்காயை உடைத்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். எதற்கு அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் உடைத்தீர்கள் என அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அர்ச்சகர் அந்த பெண்ணை திட்டியுள்ளார்.
இதனால் உடைத்த தேங்காயை நான் வாங்கமாட்டேன் என அந்த பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அர்ச்சகருக்கும், அந்த பெண்ணிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தீட்சிதர் தர்ஷன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தர்ஷனை தேடி வந்தனர்.
இந்நிலையில், தற்போது தீட்சிதர் தர்ஷனை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இனி வரும் மூன்று மாதங்கள், கோவிலில் அர்ச்சனை உள்ளிட்ட எந்த செயலிலும் அவர் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.