முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை...! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.!



Rajendra Balaji Azhar in court

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து. ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 17-ந் தேதி முதல் தலைமறைவானார். இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர். 

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை  தனிப்படை போலீசார் நேற்று கர்நாடகவில் வைத்து கைது செய்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைதான ராஜேந்திர பாலாஜி தமிழ்நாடு அழைத்து வரப்பட்டார். இதற்கிடையே, ராஜேந்திரா பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி விருதுநகருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, அவரிடம் மோசடி வழக்கு தொடர்பாக நேற்று இரவு முதல் போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைய தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.