7 சாமி சிலைகள் மீட்கப்பட்ட விவகாரம்.. காவலர், பாஜக நிர்வாகி என நீளும் பட்டியல்.. பரபரப்பு வாக்குமூலம்.!



Ramanathapuram 7 Ancient God Stature Recovered by Police Investigation Going On

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூரில் வசித்து வருபவர் அலெக்ஸ் அலெக்ஸாண்டர் (வயது 54). இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்து வருகிறார். தற்போது, கள்ளக்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இவர் தொன்மையான ஐம்பொன் சிலையை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ய இருப்பதாக சிலைதடுப்பு கடத்தல் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

மேலும், சிலை கடத்தலுக்காக மதுரையில் பதுங்கி இருப்பதாகவும் தெரியவரவே, அவரை கண்காணித்த அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தனிப்படை அமைத்து அலெக்ஸை கைது செய்தனர். விசாரணையில், அருப்புக்கோட்டையில் தலைமை காவலராக பணியாற்றி வரும் இளங்குமரன் (வயது 44), விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி ஆகியோர் கடந்த 4 வருடத்திற்கு முன்னதாக தொன்மையான 7 சாமி சிலைகளை திருடியுள்ளனர். 

இதனை ரூ.5 கோடிக்கு விற்பனை செய்து தரக்கூறி அலெக்சிடம் கூறவே, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். விசயம் வெளியே தெரியாமல் இருக்க, சாமி சிலைகளை இராமநாதபுரம் மாவட்டம், கூரிசேத்தனார் ஐயப்பன் கோவில் கால்வாய்க்குள் புதைத்து வைத்து விலை பேசி வந்துள்ளனர். இதனையடுத்து, அலெக்சின் வாக்குமூலத்தின் பேரில் தலைமை காவலர் இளங்குமரன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ramanathapuram

இவர்களிடம் நடந்த விசாரணையில், தலைமை காவலராக இளங்குமரன், விருதுநகர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் நாக நாகேந்திரன், திருத்தங்கலை சேர்ந்த கண்ணன் ஆகியோரும் மேற்கூறிய சம்பவத்தில் தொடர்பில் உள்ளவர்கள் என்று கூறியதை அடுத்து, நாக நாகேந்திரனும் கைது செய்யப்பட்டார். கண்ணனுக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகேயுள்ள மலை கிராமத்தில், 7 சாமி சிலைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என கைதான 4 பேருக்கும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், அதனை விற்பனை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்ததும் தெரியவந்ததால், இவர்கள் குழுவாக சேர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று கூறி சாமி சிலையை கைப்பற்றுகின்றனர்.

இதன்பின்னர், சிலையை விற்பனை செய்து வருமானம் பார்க்க அவர்கள் ஐயனார் கோவில் கால்வாயில் புதைத்து வைக்கவே, தனிப்படை அதிகாரிகள் சிலைகளை கைப்பற்றினர். மேலும், அந்த மலைக்கிராமத்திற்கு சிலைகள் சென்றது எப்படி? யார் சிலைகளை கடத்தியது? எனவும் விசாரணை நடந்து வருகிறது. 

அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட சிலைகள்: 

1. பெரிய நடராஜர் சிலை - 2 அடி உயரம். 
2. சிறிய நடராஜர் சிலை - ஒன்றரை அடி உயரம். 
3. நாககன்னி சிலை - ஒன்றரை அடி உயரம். 
4. காளி சிலை - 1 அடி உயரம். 
5. முருகன் சிலை - முக்கால் அடி உயரம். 
6. விநாயகர் சிலை - அரை அடி உயரம். 
7. நாக தேவதை சிலை - அரை அடி உயரம்.