பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட என் சித்தப்பாவை காப்பாற்றவில்லையே! கண்ணீருடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்!



thamilisai-sountharajan-talk-about-vasanthakumar-death

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த எம்.பி வசந்தகுமாருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சித்தப்பா... நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம். அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்.

இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு, தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்.


சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது. வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது. கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது.

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன். வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் மோடி. ராகுல் காந்தி, நிர்மலா சீத்தாராமன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.