தமிழகத்தில் ரயில் சேவை எப்போது துவங்கும்.? ரயில்வே துறை வெளியிட்ட தகவல்!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பல கட்டங்களாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. தமிழகத்தில், சென்னையை தவிர்த்து பல மாவட்டங்களில் பயணிகள் சிறப்பு ரயில் கடந்த ஒரு மாதமாக இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தீவிரமாகி வருவதால், தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசு ரயில்வேத்துறையிடம் கோரிக்கை வைத்தது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ரெயில், விரைவு ரெயில் மற்றும் புறநகர் ரெயில் சேவைகள் செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது. எனவே செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு ரயில் சேவை எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.