தறிகெட்ட சரக்கு வாகனத்தால் சோகம்.. சாலையோரம் சென்ற 2 முதியவர்கள் துடிதுடிக்க மரணம்.!
சாலையோரம் நடந்து சென்ற முதியவர்களை, சரக்கு வாகனம் மோதியதால் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்து வருபவர் சுப்புராஜ் (வயது 75). தொடர்ந்து அதே பகுதியில் அசோகன் என்பவரும் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதியன்று பிற்பகல் இருவரும் சாலையோரம் நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த சரக்கு வேன் இவர்கள் மீது மோதியுள்ளது.
இதனால் இருவரும் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் சரக்கு வாகன ஓட்டுநரான கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர்.
மேலும், விபத்துக்கு காரணமான சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அதிகமாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் காவல்துறையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.