'சிங்கப் பெண்ணே' பாடலுக்கு நன்றி தெரிவித்த பயிற்சியாளர்.! வாழ்த்தி மகிழ்ந்த ஏ.ஆர் ரகுமான்.! நெகிழ்ச்சி சம்பவம்.!
இந்திய சினிமா மட்டுமல்லாது சர்வதேச சினிமா துறையிலும் தன்னுடைய இசையால் முத்திரை பதித்து கொண்டிருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். 2008-ஆம் ஆண்டு இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினியர் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு கோல்டன் குலோப் மற்றும் ஆஸ்கார் விருதுகளும் வழங்கப்பட்டது.
இதன் மூலம் ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். சமீபத்தில் இவர் இசையமைத்த லால் சலாம் மற்றும் அயலான் ஆகிய திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. எனினும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆடுஜிவிதம் என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். இந்தத் திரைப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற சிங்க பெண்ணே என்ற பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளம் பெண்களிடம் இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. பல பெண்களும் இந்தப் பாடல் தங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்ததாக தெரிவித்திருந்தனர்.
இந்திய பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக இருக்கும் கவிதா செல்வராஜ் சிங்க பெண்ணே பாடல் தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது என தெரிவித்திருக்கிறார். இதற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமானும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான 'X' தளத்தில் பதிவு செய்திருந்த கவிதா செல்வராஜ் தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு சிங்க பெண்ணே பாடல் மிகவும் உறுதுணையாக இருந்தது என தெரிவித்திருக்கிறார். இதற்காக ஏ.ஆர் ரஹ்மானுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான் தொடர்ந்து முன்னேறுங்கள் என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.