விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நிறைவு! விஜய் ரசிகர்கள் குமுறல்!
விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதேபோல், படம் தயாரிக்க கடன் கொடுத்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
அங்கு கைப்பற்ற ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து, இரவு முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கு விஜய் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது..
விஜய் வீட்டில் தொடர்ந்து நடைபெற்ற சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அங்கிருந்து பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா, ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்பது குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.
இதுகுறித்து விஜய் ரசிகர்கள் கூறுகையில், நடிகர் விஜய் முறையாக வரி கட்டுகிறார். விஜய் மேற்கொண்டு வரும் சமூக நலப்பணிகள் அனைவருக்கும் தெரியும். மேலும், தான் நடிக்கும் படங்களில் கூட நல்ல கருத்துகள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். அப்படிப்பட்ட கலைஞனை அவரது காரில் கூட ஏற அனுமதிக்காமல் அழைத்து வந்த செயல் விஜய் ரசிகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.