பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 80 பேருக்கு உடல்நலம் பாதிப்பு.! கவலைக்கிடமாக 6 பேர்.!



80 people, including children and women, who ate prasadham, suffered health problems

அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாய் பகுதியை சேர்ந்த தேகாபம் அப்மனோலா கிராமத்தில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 80 பேர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தேகாபம் அப்மனோலா கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கொண்டைக்கடலை மற்றும் பச்சைப்பயறு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரசாதத்தை சாப்பிட்ட சற்று நேரத்தில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சையளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.