அத்திப்பள்ளி ஆர்.டி.ஓ அலுவலகத்தை கதறவிட்ட கர்நாடக கே.ஆர்.எஸ் தொண்டர்கள்.. இலஞ்சத்திற்கு கண்டனம்.. தமிழக ஓட்டுனருக்கு ஆதரவு குரல்.!



Karnataka KRS Party Supporters Awareness about Bribery at Attibele RTO Office

தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், அத்திப்பள்ளியை அடுத்து அமைந்துள்ள ஆர்.டி.ஓ ஆபிசில் லாரி பர்மிட் பதிவு செய்து பயணிக்க வேண்டும். இந்த பர்மிட் போடுவதற்கு லாரி ஒன்றுக்கு அரசு விதிக்கப்பட்ட தொகை ரூ.335 வசூல் செய்யப்பட வேண்டும். கனரக லாரியின் வகைகள் மற்றும் எடையளவை பொறுத்து தொகை மாறுபடும். 

ஆனால், கர்நாடகா செல்லும் லாரிகளுக்கு பர்மிட் போட ஓட்டுனர்கள் ரூ.500 வழங்கினால், அவர்களுக்கு மீதி தொகை வழங்கப்படுவது இல்லை. அவ்வாறே வழங்கினாலும் ரூ.100 தான் மீதி வழங்கபடுகிறது. கூடுதல் தொகை வசூல் செய்யப்படுகிறது. இந்த சர்ச்சை கர்நாடகாவில் இருந்து தமிழகம் செல்லும் பர்மிட் லாரிகளுக்கும் இருந்து வந்தது. இந்த நிலையில், அத்திப்பள்ளி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கே.ஆர்.எஸ் பிரதிநிதிகள் தீடீர் சோதனை நடத்தியுள்ளனர். 

அப்போது, கர்நாடக வழியே பயணிக்க தயாராக இருந்த லாரி ஓட்டுநர், அவரது லாரிக்கு பர்மிட் போட வந்திருந்த நிலையில், அவர் ரூ.500 பணம் கொடுத்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த கே.ஆர்.எஸ் தொண்டர்கள், லாரி ஓட்டுனரிடம் உங்களின் லாரிக்கு பெர்மிட் தொகை எவ்வுளவு என்று கேட்கவே, அவர் ரூ.336 என்று கூறியுள்ளார். மீதி தொகை அதிகாரிகள் கொடுக்கிறார்களா? என்று கேட்க, ஓட்டுநர் அமைதியாக இருந்துள்ளார். 

நிலைமையை புரிந்துகொண்ட கே.ஆர்.எஸ் தொண்டர்கள், லாரி ஓட்டுனரிடம் யாரிடமும் லஞ்சம் வழங்க கூடாது என அறிவுரை கூறிய நிலையில், அதிகாரிகளிடம் இலஞ்சம் வாங்குவது தவறு என வலியுறுத்தி இருக்கின்றனர். மேலும், நீங்கள் வாங்கும் இலஞ்சத்தை ஆட்சியாளர்களுக்கு கொடுக்கிறீர்களா? என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். 

இந்த வீடியோ பதிவு செய்யப்படும் போது நிகழ்விடத்தில் இருந்த லாரி ஓட்டுநர்களும், எதிர்காலத்தை நினைத்து இலஞ்ச பிரச்சனை குறித்து உண்மை தகவலை தெரிவிக்காமல் மறுத்துவிட்டனர் என்பது தான் விஷயம் தெரிந்த ஓட்டுனர்களின் நிதர்சன மன ஆதங்கமாக உள்ளது. இந்த விஷயம் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.