இந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்! கம்பராமாயண வரிகளை தமிழில் உச்சரித்த பிரதமர் மோடி!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவில், அடிக்கலை நாட்டிவைத்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதமர் மோடி பேசுகையில், அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அழைப்பு விடுத்ததை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்தியாவில் மட்டுமின்றி இன்று உலகம் முழுவதும் ஜெய்ஸ்ரீ ராம் என்ற கோஷம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். நீண்ட கால ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கனவு நனவாகிறது. ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது. கோவிலுக்காக பல தலைமுறையினர் தியாகம் செய்துள்ளனர். பலர், தங்களது உயிரை தியாகம் செய்து ராமர் கோவிலுக்காக போராடியுள்ளனர். அவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் ராமரை வணங்குகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலும் ராமர் கதை உள்ளது. பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டு இருக்கிறது. தமிழில் கம்பர் எழுதியுள்ள ராமாயணம், ராமரின் புகழை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. "முன்னேறுவதற்கு இதுதான் நேரம், காலந்தாழ்த்தாமல் முன்னேறி செல்லுங்கள்" என்ற கம்பராமாயண வரிகளை மேற்கோள்காட்டி பேசினார்.