குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி.! குவியும் பாராட்டுகள்!



The IAS officer returned to work 14 days after the baby was born

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த சவுமியா பாண்டே துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் காசியாபாத்தில் கொரோனா தடுப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார். கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. 

பொதுவாக அரசு வேலையில் இருப்பவர்கள் 6 மாத காலம் வரை பேறுகால விடுப்பு எடுக்கலாம். ஆனால் சவுமியா பாண்டே 14 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளார். தனது கைக்குழந்தையுடன் பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி.  அதனால் எனது பணியை நான் கவனிக்க வேண்டும். கொரோனா பாதிப்புகளால் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என கூறினார். அவரது செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.