சூப்பரான கல்யாண வீட்டு ரசம் செய்வது எப்படி.?! இந்த முறை அசத்தலான சுவையை கொடுக்கும்.!
பலருக்கும் திருமண வீட்டில் வைக்கப்படும் ரசம் மிகவும் பிடிக்கும். இந்த ரசத்தை எப்படி தான் வீட்டில் செய்து பார்த்தாலும் அதே சுவை இருக்காது. ஆனால், கீழ்காணும் முறைகளை பின்பற்றி வைத்தால் நீங்கள் சுவையான கல்யாண ரசத்தை சூப்பராக வைக்க முடியும்.
தேவையான பொருட்கள் :
மிளகு - ஒரு ஸ்பூன்,
சீரகம் - ஒன்றரை ஸ்பூன்,
வெந்தயம் - 8
கொத்தமல்லி - ஒரு ஸ்பூன்,
மிளகாய் வத்தல் - 3
பூண்டு பல் - 8
தக்காளி - 2
புளி - சிறிதளவு
உப்பு
கொத்தமல்லி இலை
கருவேப்பிலை
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய்
பெருங்காய பொடி
செய்முறை :
கொத்தமல்லி, மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் வெந்தயம், காய்ந்த மிளகாய் உள்ளிட்டவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் பூண்டு பற்களை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழ அளவு புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தக்காளிகளை துண்டு துண்டாக வெட்டி சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும். இதில் கருவேப்பிலை கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து கரைக்க வேண்டும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இதில் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பச்சை மிளகாய் சிறிது கருவேப்பிலையை சேர்த்து வதக்கி இதனுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு சீரகப் பொடியை போட வேண்டும்.
பச்சை வாசனை போகும் வரை ஒரு நிமிடம் அளவிற்கு கிளறி விட்டு அதில் புளி கரைச்சலை எடுத்து சேர்க்க வேண்டும். பின்னர் அதில் பெருங்காய பொடியை லேசாக போட வேண்டும். அடுப்பை மிகவும் குறைவான நெருப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பின்னர் கொத்தமல்லி இலைகள் சிலவற்றை அதில் சேர்த்து லேசாக நுரை வந்தவுடன் இறக்கினால் சுவையான ரசம் தயார்.