ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
திமுக விசுவாசிகள் என் பக்கம் தான் உள்ளார்கள்; ஆட்டத்தை ஆரம்பித்த அழகிரி
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுகவில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள தமிழகமே ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் அழகிரி, கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபிறகு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவசர செயற்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. திமுக கட்சி விதிமுறைகளின் படி, அக்கட்சியின் தலைவர் பதவி காலியானால், உடனே அப்பதவியை நிரப்பப்பட வேண்டும். இதனால், நாளை நடைபெறும் அவசர செயற்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு அவருடைய மகன் மு.க அழகிரி திடீரென்று சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
'என்னுடைய ஆதங்கத்தை எனது தந்தையும் தலைவருமான கருணாநிதியிடம் வேண்டிக்கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. தமிழகத்தில் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லோரும் என் பக்கம் தான் உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விசுவாசிகளும் என் பக்கம் தான் உள்ளார்கள், என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காலம் பின்னாளில் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். நான் இப்போது திமுகவில் இல்லை. எனவே, திமுகவின் செயற்குழு கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'.
இந்த நிலையில் மு.க. அழகிரியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க ஆலோசனை நடப்பதாக வந்த தகவலை கண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என அவர் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.