உங்களால் முடிந்தால், உங்களுக்கு திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள்!.. அண்ணாமலையின் சவால்...!



Annamalai said that if the incompetent DMK has a tirani, arrest me

புலம் பெயர்ந்த வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் தாக்குதல்களுக்கு உள்ளானதாக வெளியான காணொலியால் அச்சமடைந்த வட மாநிலத்தவர்கள் கடந்த 2 நாட்களாக மூட்டை முடிச்சுகளுடன் அதிக அளவில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொழிற்சாலை கட்டுமான பணிகள் முதல் பெரும் உணவகங்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சாலையோர சிறு வியாபாரங்கள் வரை தற்போது வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்குதல்களுக்கு உள்ளானதாக காணொலி ஒன்று வேகமாக பரவியது.

அந்த காணொலி பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களின் தொகுப்பு என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த விவகாரம்  பீகார் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர்.

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பா.ஜ.க  மாநில தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பல்வேறு கால கட்டங்களில் தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் பேசிய காணொளிகளை தொகுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து மேலும் கூறியிருப்பதாவது:-

 

வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.