மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துவங்கியது வாக்கு எண்ணிக்கை! வாக்கு எண்ணும் மையத்திற்கு கடும் விதிமுறைகள்!
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாக அதாவது மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரிந்தாலும், இறுதி முடிவுகள் வெளியாக இரவு கூட ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வாக்கு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.
வேட்பாளர்களின் முகவர்கள் காலை உள்ளே சென்றவுடன் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை வெளியே வர முடியாது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் இயந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் எண் ஆகியவற்றைக் காண்பித்த பிறகே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.