3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
நல்ல தலைவர் கிடைத்தால் நாடு வளம் பெறும்: மாணவர்களிடையே ராகுல் காந்தி உருக்கம்..!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ராகுல்காந்தி, 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி 4 நாள் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு கேரள மாநிலத்தை வந்தடைந்தார். கேரளாவில் நேற்று முன்தினம் பாறசாலையில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். அங்கு அவருக்கு வழிநெடுக கட்சி தொண்டர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.
அல்சாஜ் கன்வென்சன் மையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பாதயாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில், திருவனந்தபுரம் பத்தனம்திட்டை மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே புனித மேரி மேல்நிலை பள்ளியில் ஓய்வெடுத்த போது ராகுல்காந்தி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
வளர்ந்து வரும் புதிய தலைமுறையினருக்கு போதிய கல்வியை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதை பொருட்களுக்கு அடிமையாவதில் இருந்து அவர்களை மீட்க முடியும். இந்திய ஒற்றுமை பாதயாத்திரை இளைய சமூகத்தை கருத்தில் கொண்டு நடத்தப்படவில்லை. இந்தியாவில் அன்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். சாதி, மத வேறுபாடுகளை களைய வேண்டும் என்பதே இந்த யாத்திரையின் நோக்கம்.
நான் கேரள மாநில மக்கள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்துள்ளேன். கேரள மக்களுக்கு அரசியல் ரீதியாக நல்ல புரிதல் உள்ளது. குழந்தைகள் பள்ளி பருவம் முதல் சிறப்பான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். அப்போது தான் சிறந்த தலைவர்களாக வர முடியும். சிறந்த தலைவர்களால் மட்டுமே நாட்டை வலுப்படுத்த முடியும். நல்ல தலைமை கிடைத்தால், நமது நாட்டை நல்ல முறையில் வளர்ச்சி பாதையில் வழி நடத்தமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.