கல்லெறிந்தால் உடைந்து போக கண்ணாடி மாளிகை அல்ல; அ.தி.மு.க மாபெரும் சமுத்திரம்: டி.ஜெயக்குமார் பதிலடி..!
கல்லெறிந்தால் உடைந்து போக அ.தி.மு.க கண்ணாடி மாளிகை அல்ல அது மாபெரும் சமுத்திரம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதவி வகித்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். அதற்கு மறு நாளே பா.ஜ.க மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா ஐ.டி. அணி நிர்வாகிகள் 14 பேர், கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் அனைவரும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
முன்னதாக சி.டி.ஆர்.நிர்மல்குமார் அ.தி.மு.கவில் இணைந்த போதே, கூட்டணி தர்மத்தை மீறி பா.ஜனதா கட்சியினரை அ.தி.மு.க இணைத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அடுத்தடுத்த கட்சி தாவல்களால் இரு கட்சிகளின் தலைவர்கள் இடையே அறிக்கை போர் உச்சத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே, ஜெயலலிதா அம்மையார், கலைஞர் கருணாநிதி போன்று நானும் ஒரு ஆளுமை மிக்க தலைவராக இருக்க விரும்புகிறேன் என்றும் பா.ஜனதா கட்சி திராவிட கட்சிகளை நம்பிய காலம் மலையேறிவிட்டது. தற்போது பா.ஜனதாவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன என்று கூறினார். இது அ.தி.மு.கவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அ.தி.மு.க மூத்த தலைவர்களுல் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, கல் எறிந்தால் உடைய அ.தி.மு.க ஒன்றும் கண்ணாடி அல்ல. இந்த இயக்கம் ஒரு பெரும் சமுத்திரம் போன்றது. சமுத்திரத்தில் கல் எறிந்தால் கல் தான் காணாமல் போகும். ஆனால் சமுத்திரம் அப்படியே தான் இருக்கும். அதில் அலைகள் அடித்துக் கொண்டு தான் இருக்கும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.கவில் தற்போது மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் விரும்பி வந்து அ.தி.மு.கவில் இணைந்துள்ளனர். இவற்றை அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று கூறினார்.