தி.மு.க-வுக்கு தமிழக பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும்: அந்தர் பல்டியடித்த அண்ணாமலை..!



Tamil Nadu BJP will always support the Tamil Nadu government's stand against the Megha Dadu Dam

மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு, தமிழக பா.ஜ.க எப்போதும் துணை நிற்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இது குறித்து மேலும் கூறியதாவது:-

அ.தி.மு.க-வுடன் எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை தமிழக பா.ஜ.க-வுக்கு இல்லை, அது மட்டுமின்றி கட்சியை வளர்க்கவே நாங்கள் பாடுபடுகின்றோம் என்று கூறினார்.

மேலும் கருத்தியல் ரீதியாக  நீட், தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஒரு புறமும், பா.ஜ.க மட்டும் தனித்து அதற்கு எதிர்புறமும் உள்ளது. மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பா.ஜ.க எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அண்ணாமலை கூறினார்.

மேலும் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் துறை செயலாளர்களை மாற்றுவதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை, ஒருவேளை அமைச்சர்களை மாற்றினால் ஏதாவது பலன் கிடைக்ககூடும். அதோடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்படி இருக்க கூடாதோ அப்படி இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து, அண்ணாமலை விமர்சனம் செய்தார்.

காவல்துறை மீது பொதுமக்கள் அச்சமாக இருக்கிறார்கள். சாத்தான்குளம் காவல் நிலைய லாக்-அப்  மரணம் தொடர்பான விவகாரத்தை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அரசியல் நிகழ்வாக மாற்றினார். ஆனால், தற்போது லாக்-அப் மரணம் என்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. தி.மு.க ஆட்சி பொறுபேற்ற கடந்த 1 வருடத்தில் மட்டும் 7 லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இது குறித்து காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் பேசாமல் இருப்பது ஏன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.