40 ஆண்டு கால உலக தடகள வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா: முதல் தங்கம் வென்று சாதனை..!!



India's Neeraj Chopra created a new history by winning the gold medal in the final round of the World Athletics Championships javelin throw.

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் கடந்த 9 நாளாக 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வந்தது. இந்த போட்டியின் கடைசி நாளான நேற்று இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்று நடந்தது.

 இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற 12 பேரில் 3 பேர் இந்திய வீரர்களாக இருந்ததால் இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இறுதி சுற்றில் பங்கேற்ற ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.

இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள சாம்ப்பியன்ஷிப் வரலாற்றில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவாலாக இருந்த பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கத்துடன் 2 ஆம் இடத்தை பிடித்தார்.

மற்ற இந்திய வீரர்களான கிஷோர் குமார் 84.77 மீட்டர் தூரமும், டி.பி.மனு 84.14 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து முறையே 5 மற்றும் 6 வது இடங்களை பிடித்தனர். உலக தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 3 வது பதக்கமாக பதிவானது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்ப்பியன்ஷிப் போட்டியில் இதே நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கமும், கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.