விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய ஐ.பி.எல் போட்டிகள்..!! 3 இடங்களுக்காக முட்டி மோதும் 7 அணிகள்..!!
தர்மசாலாவில் இன்று நடைபெறும் 64 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 63 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தர்மசாலாவில் இன்று நடைபெறும் 64 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தலா 15 புள்ளிகளுடன் சென்னை, லக்னோ அணிகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. மும்பை அணி 14 புள்ளிகள் பெற்று 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
பஞ்சாப் அணி இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 8 வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி மீதமுள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான் ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கும். மேலும் நிகர ரன்-ரேட்டிலும் முன்னேற்றம் காண வேண்டிய சூழலில் பஞ்சாப் அணி உள்ளது.
இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. தனது முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த டெல்லி அணி அடுத்த 5 போட்டிகளில் 4 ல் வெற்றி பெற்று எழுச்சி கண்டது. ஆனால் அதன் பிறகு கடந்த 2 போட்டிகளில் சென்னை, பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியதில், பஞ்சாப் 16 போட்டிகளிலும் டெல்லி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க பஞ்சாப்பும், தொடரை வெற்றியுடன் முடிக்க டெல்லியும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.