முதன்முறையாக சச்சின் டெண்டுல்கரை திட்டி தீர்க்கும் மக்கள்.! என்ன காரணம்.?



sachin-talk-about-farmers-protest

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரது பதிவில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியானது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ரிஹானாவின் டுவிட்டுக்கு பிறகு, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், இந்திய விவசாயிகள் போராட்டத்துடன் நாங்களும் துணை நிற்கிறோம் என தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ரிஹானாவிற்கு பதில் அளித்துள்ள சில ரசிகர்கள், இந்திய விவசாய போராட்டத்தில் இருந்து விலகி இருக்கும்படியும், சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும்வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில்,
"இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு உலகளவில் வைரலாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவிற்கு சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.