மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெங்களூரு வெற்றி பெற்றால்..?!! லீக் சுற்றுடன் வெளியேறும் கட்டாயத்தில் 3 அணிகள்..!!
ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 64 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 65வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள அந்த அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தலா 15 புள்ளிகளுடன் சென்னை, லக்னோ அணிகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. மும்பை அணி 14 புள்ளிகள் பெற்று 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
ஐதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள 2 லீக் போட்டிகளில் உள்ளூரில் நடைபெறும் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு அணி இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி தனது கடைசி போட்டியில் ராஜஸ்தானை 59 ரன்னில் சுருட்டியதுடன் 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் பெங்களூரு அணியின் நிகர ரன் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு அணி எஞ்சியுள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நேரடியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. மாறாக ஒரு போட்டியில் தோற்றால் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்கும் சூழல் உருவாகும். எனவே கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் அந்த அணி களமிறங்கும்.
இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 22 முறை மோதியதில், ஐதராபாத் 12, பெங்களூரு 9 வெற்றிகளை பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. வெற்றியுடன் விடைபெற ஐதராபாத் அணியும், அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க பெங்களூரு அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் காத்திருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகளின் அடுத்த சுற்று கனவு கலைந்துவிடும். மீதமுள்ள 3 இடங்களுக்கு சென்னை, லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.