உலககோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டை மண்ணின் மைந்தன் தொண்டைமான்.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!



world-cup-sniper-competition-gold-medal

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி 15 தங்கம் உட்பட 30 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பிடித்தது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் அமெரிக்கா மற்றும் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 15 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பெண்கள் அணிக்கான போட்டியில் ஸ்ரேயாசி சிங், மனீஷா கீர் மற்றும் ராஜேஸ்வரி குமாரி ஆகிய மூன்று பேரும் கஜகஸ்தானை 6-0 என்ற கணக்கில் சுலபமாக வீழ்த்தி தங்கம் வென்றனர். இதனையடுத்து பைனலில் கஜகஸ்தான் அணியுடன் மோதிய பிரித்விராஜ் தொண்டைமான், லக்‌ஷய் ஷியோரன், கைனன் செனாய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி 6-4 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.

பிரித்விராஜ் தொண்டைமான் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், தனது திறமையின் மூலமாக இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள திரு.பிரித்திவிராஜ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "தங்கப்பதக்கம் வென்றுள்ள திரு.பிரித்திவிராஜ் அவர்கள் கழக அமைப்புச் செயலாளரும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான திருமதி. சாருபாலா தொண்டைமான் அவர்களின் புதல்வர் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. உலககோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்ற திரு.பிரித்திவிராஜ் தொண்டைமான் அவர்கள் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.