ரயில்வே கேட்டை உடைத்துக்கொண்டு தண்டவாளத்தில் நின்ற ஆட்டோ! பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே குன்றாண்டார் கோவில் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. ரயில் வரும்போதெல்லாம் இந்த சாலையில் உள்ள ரயில்வே கேட்டை மூடிவைத்து, ரயில் சென்றபிறகு ரயில்வே கேட்டை திறந்துவிடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் காரைக்குடியில் இருந்து ரெயில் என்ஜின் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த சாலையில் உள்ள ரயில்வே கேட்டை மூட ரயில்வே ஊழியர் சிக்னல் கொடுத்து அந்த ரயில்வே கேட்டை மூடிக்கொண்டிருந்தார். அப்போது, தர்காவுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு நிவாஸ்பாபு என்பவர் ஆட்டோவை ஓட்டிவந்துள்ளார். ஆட்டோவை ஓட்டிவந்த நிவாஸ்பாபு, ரயில்வே கேட் முழுவதும் இறங்குவதற்குள் சென்றுவிடலாம் என நினைத்து அவசர அவசரமாக ஆட்டோவை ஓட்டிச்சென்றுள்ளார்.
அப்போது முதல் கேட்டை கடந்து தண்டவாள பகுதிக்குள் சென்ற போது, அதற்கு அடுத்த கேட் கீழே வந்து விட்டது. இதனால் ஆட்டோ ரயில்வே கேட்டில் மோதி தண்டவாள பகுதியில் நின்றது. இதனால் அந்த வழியாக வந்த ரயில் என்ஜின் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நின்றது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றபடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு புறப்பட்டு வந்த பயணிகள் ரயில் கீரனூரிலேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி ரயில்வே கேட் திறக்கப்பட்டது. சுமார் 1 மணி நேர தாமதத்துக்கு பின்னர் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. ஆட்டோ ஓட்டுனரின் கவனக்குறைவால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ரயில்வே கேட்டில் மோதிய ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.