பிச்சை எடுக்கும் பணத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் முதியவர்..! அவரின் மனித நேயத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்..!
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வயதான முதியவர் ஒருவர் தான் பிச்சை எடுக்கும் பணம் மூலம் 4 அரசு பள்ளிகளுக்கு உதவும் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாதான்குளத்தில் உள்ள ஆலங்கிணறு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன் . இவருக்கு 67 வயது ஆகிறது. நல்ல நிலையில் இருந்த இவரது குடும்பம் சில காரணங்களால் கஷ்டப்படும் நிலைக்கு வந்துள்ளது. மேலும், இவரது மனைவியும் இறந்துபோக தனது மகன் வீட்டில் வசித்துவந்துள்ளார் பாண்டி.
மகனும் இவரை சரிவர கவனித்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்துள்ளார் பாண்டி. ஒருநாள் கோவில் ஒன்றில் மயங்கி விழ, அங்கே வந்தவர்கள் இவருக்கு உணவு கொடுத்து காப்பாற்றியுள்ளனர்.
அதில் இருந்து பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார் பாண்டி. தான் பிச்சை எடுக்கும் பணத்தில் தனது தேவைக்கு போக, மீதி உள்ள பணத்தில் பலருக்கு உதவி செய்ய தொடங்கியுள்ளார் பாண்டி. அதன்மூலம், நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள பண்ணையார்குளம், இளையநயினார்குளம், பாப்பான்குளம், ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளுக்கு 3 கேரம் போர்டுகள், மாணவர்கள் தண்ணீர் குடிக்க உதவும் வகையில் டிரம்கள், ஸ்கிப்பிங் கயிறுகள், விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவற்றை 18,000 ரூபாய் மத்திப்பில் வாங்கிக் கொடுத்துள்ளார் பாண்டி.
தான் பிச்சை எடுக்கும் பணத்தில் மாணவர்களுக்கு உதவும் இவரது நல்ல குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.