மறுமணம் செய்வதாக கூறி ரூ.85.80 இலட்சம் பறித்து ஏமாற்றிய போலி காவல் அதிகாரி கைது.!
மறுமணத்திற்கு தயாராக இருந்து பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.85.80 இலட்சம் பறித்து ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள ராஜகீழ்ப்பக்கம் பகுதியை சார்ந்தவர் மோகன தாஸ். இவரது மகள் ரேகா. இவர் கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். திருவெற்றியூர் பகுதியை சேர்த்தவர் சிவா என்ற சிவாஜி சிவ கணேஷ் (வயது 42). இவர் தன்னை காவல்துறை சிறப்பு புலனாய்வு ஆய்வாளர் என்று கூறி, ரேகாவை மறுமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மறுமணத்திற்கு தயாராக இருந்து ரேகாவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், அவரிடம் இருந்து 1 கார் மற்றும் ரூ.85.80 இலட்சத்தை நூதன முறையில் ஏமாற்றி வாங்கி இருக்கிறார். பின்னர், திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ரேகாவின் தந்தை விசாரணை செய்தபோது சிவா காவல் அதிகாரி இல்லை என்பது உறுதியானது.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோகன் தாஸ் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட, தனிப்படை அமைக்கப்பட்டு சிவா என்ற சிவாஜி சிவகணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.