தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 5 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
6ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் வானம் அடுத்து 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கோயம்புத்தூர் சின்கோனா, சேலம் ஏற்காடு பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழையும், திருவாரூர் மன்னார்குடி, நீலகிரி தேவாலாவில் இரண்டு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 5 ஆம் தேதி மற்றும் 6ம் தேதியில் வடக்கு ஆந்திரா கடலோர பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், வட தமிழக கடலோர பகுதி, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம்வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.