மணற் கொள்ளையை தமிழக அரசு உடனே தடுக்க வேண்டும்..!! கனிமொழி எம்.பி பரபரப்பு ட்வீட்..!!



Kanimozhi MP has said that the corruption like sand mining which destroys natural resources should be stopped immediately.

இயற்கை வளங்களை அழித்திடும் மணற்கொள்ளை போன்ற சீர்கேடுகளை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த லூர்து பிரான்சிஸ் வழக்கம் போல் அலுவலக பணியில் ஈடுபட்டு இருந்தார்.

நண்பகல் 12 மணிக்கு அந்த அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் இருவர் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மணற் கொள்ளையை தடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், லூர்து பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், அவரது  குடும்பத்தினரைச் சந்தித்த தூத்துக்குடி எம்.பி கனிமொழி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள கனிமொழி எம்.பி, முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், அவரது  குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

மணற்கொள்ளையைத் தடுப்பதற்காகச் சமரசமின்றி துணிச்சலுடன் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட உத்தரவிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

இயற்கை வளங்களை அழித்திடும் மணற்கொள்ளை போன்ற சீர்கேடுகளை உடனடியாக தடுத்திடவேண்டும்.