கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி ஒரு குடும்பத்தையே தீர்த்து கட்டிய இளைஞன்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!



Killing 3 women by giving poison

கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி ஏமாற்றி விஷ மாத்திரையை கொடுத்து 3 பெண்களை கொலை செய்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களும், இவரது மகள் தீபா மற்றும் தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் ஆகிய நான்குபேரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்துள்ளனர். 

அப்போது, கருப்பண்ணனின் வீட்டிற்கு வந்த சுமார் 20 வயதுடைய இளைஞர் ஒருவர், கருப்பண்ணனிடம் கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாகவும், இதற்காக நான் வழங்கும் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் சொன்னதை நம்பி, கருப்பண்ணன், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோர் அவர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞர், அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அதன் பிறகு சுமார் அரை மணி நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட நான்கு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் நான்கு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே மல்லிகா உயிரிழந்தார்.
 
குப்பம்மாள், கருப்பண்ணன், தீபா ஆகிய மூவரும் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குப்பம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பண்ணன் மகள் தீபாவும் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பண்ணனிடம் கல்யாணசுந்தரம் என்பவர் ரூ.15 லட்சம் கடன் வாங்கியிருந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல் வாங்கலில் கருப்பண்ணனுக்கும், கல்யாணசுந்தரத்திற்கும் பிரச்னை ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் கருப்பண்ணணையும், அவரது குடும்பத்தினரையும் கல்யாணசுந்தரம் கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.  

இந்தநிலையில் கல்யாணசுந்தரம், அவரது மனைவியின் உறவினரான சென்னிமலை சரவணபூரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான சபரி என்பவர் மூலம்  கொரோனா பரிசோதனை செய்வதாக நடித்து தென்னை மரத்திற்கு வைக்கப்படும் மாத்திரையை கொடுத்து 3 பெண்களை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்யாணசுந்தரத்தையும், சபரியையும் போலீசார் கைது செய்தனர்.