#JustIN: மரத்தடியில் அமர்ந்த மாணவர்கள் மீது முறிந்து விழுந்த மரம்: 15 மாணவர்கள் படுகாயம்.! மதுரையில் சோகம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், தெற்குத்தெரு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று அரையாண்டு தேர்வு நடந்ததால், 09ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்துக்கொண்டு இருந்ததாக தெரியவந்துள்ளது.
அப்போது திடீரென பலத்த காற்று வீசியதில் மரம் முறிந்து மாணாக்கர்கள் மீது விழுந்துள்ளது. இதில் 5 மாணவர்கள், 10 மாணவிகள் என 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரும், மேலூர் காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதுமான கட்டிட வசதி இல்லாததே இவ்விபத்திற்கு காரணம் என மாணவர்களின் பெற்றோர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.