அதிரடியாக குறையவிருக்கும் வெங்காய விலை! மத்திய அரசின் அதிரடி திட்டம்!
வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் டன் வெங்காயம் இந்த மாத இறுதிக்குள் இந்தியா வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமையலுக்கு அத்தியாவசியமான பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்தபடி இருக்கிறது. வெங்காய சாகுபடி அதிகமுள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் சென்றது.
இதனால் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை சமாளிக்கவும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 17,069 டன் வெங்காயம் டிசம்பர் மாத இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும் என்றும், துருக்கி நாட்டிலிருந்து 11,000 டன் வெங்காயம், இம்மாத இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் இறக்குமதி செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.