ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
இறந்தவரின் முகத்தை கடைசியா ஒரு தடவை பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் இறந்துவிட்டதாக கூறி அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் அவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது உறவினர்கள் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானதை அடுத்து அவர் தீவிர கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொளஞ்சியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவமனையிலிருந்து கொளஞ்சியப்பனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொளஞ்சியப்பனின் உடல் எனக் கூறி பாலிதீன் பைகளால் சுற்றப்பட்ட உடலை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் கொளஞ்சியப்பன் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து கொளஞ்சியப்பனின் உடல் மையான கொட்டகையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொளஞ்சியப்பனின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்க ஆசைப்பட்ட அவரது உறவினர் சடலத்தின் முகத்தில் மூடப்பட்டிருந்த துணியை விளக்கியுள்ளார். துணியை விலக்கியதும் அங்கிருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது காரணம், அங்கு இருந்தது கொளஞ்சியப்பனின் உடலே இல்லை. கொளஞ்சியப்பனுக்கு பதிலாக வேறு ஒரு நபரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் அவரது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.
இதனை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கொளஞ்சியப்பன் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலர் என்பவரின் உடல் என தெரிய வந்துள்ளது.
உடல்நலக்குறைவால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளஞ்சியப்பனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கொளஞ்சியப்பன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பாலரை கொளஞ்சியப்பன் இதற்கு முன்னர் சிகிச்சை பெற்ற வந்த படுக்கையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் பாலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்தப் படுக்கையில் இருந்தது கொளஞ்சியப்பன் உடல்தான் என நினைத்து மருத்துவமனை ஊழியர்கள் அவரது உடலை கொளஞ்சியப்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது.
இந்நிலையில் சிகிச்சையில் இருப்பவர் இறந்துவிட்டதாக கூறி வேறு ஒருவரின் உடலை அனுப்பி வைத்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.