மதுபோதையில் அரசு பேருந்தை தாறுமாறாக ஒட்டிய ஓட்டுநர்.! சுதாரித்த பயணிகள் எடுத்த அதிரடி முடிவு.!



police catch drunk and drive govt bus driver

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அரசு பேருந்து ஒன்று நேற்று இரவு 8 மணி அளவில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் சுமார் 40க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். இந்த பேருந்தை ராபின் சிங் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

பேருந்து நாகர்கோவிலில் கிளம்பியதிலிருந்து சரியான திசையில் செல்லாமல் அங்கும் இங்குமாக தடுமாறிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதில் இருந்த பயணிகள் ஓட்டுனர் மது அருந்தி உள்ளாரோ என அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டு பேருந்தை ஓட்டுநரிடம் நிறுத்தும்படி கூறியுள்ளனர்.

இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் சோதனைச் சாவடிக்கு அருகே பேருந்தை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் சோதனை சாவடியில் இருந்த காவலர்களிடம் ஓட்டுநர் மதுபோதையில் பேருந்தை ஓட்டி வந்ததாக புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஓட்டுநர் இன்று சக ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்றதற்காக பார்ட்டி வைக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு மது அருந்தினேன் என ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அப்பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் வேறு பேருந்துகளில் மாற்றி விடப்பட்டனர். இதனையடுத்து ஓட்டுநரிடம் இருந்து பேருந்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.