மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாட்டுச்சாணத்தை வைத்து 32 வருடம் சாணஎரிவாயு சமையல்.. அசத்தும் சேலம் விவசாயி.! இயற்கையின் நண்பன்.!!
கடந்த 32 வருடமாக சாணக்கழிவு எரிவாயுவை உபயோகித்து வந்த விவசாயியின் குடும்பம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
இன்றளவில் கிராமப்புறத்திலும் பாரம்பரிய விறகு அடுப்பு சமையல் குறைந்துவிட்ட நிலையில், குக்கிராம இல்லங்களில் சமைப்பதற்கு எரிவாயு உருளைகள் உபயோகம் செய்யப்பட்டு வருகின்றன. அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மாத பட்ஜெட்டில் சமையல் எரிவாயு ரூ.1000 வருவதால், இது இன்றளவும் ஒரு சுமையாக இருந்து வருகிறது. இதனால் சமையல் எரிவாயுக்கு மாற்றாக உள்ள இயற்கை எரிவாயுவை மக்கள் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி, பொன்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தினர், கடந்த 32 வருடமாக சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல், கால்நடை சாணத்தை எரிவாயுவாக உற்பத்தி செய்து சமைக்க பயன்படுத்தி வருகின்றனர். பரவக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மகேஷ் (வயது 52). இவர் கடந்த 32 வருடத்திற்கு முன்னதாக அரசின் மானிய உதவியுடன் கால்நடை சாணத்தை பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கும் கலனை அமைத்து, இன்று வரை பராமரித்து உபயோகம் செய்து வருகிறார்.
இந்த விஷயம் தொடர்பாக விவசாயி மகேஷ் மற்றும் அவரின் மனைவி ஜெயலட்சுமி பேசுகையில், "பொன்னாரம்பட்டி கிராமத்தில் எங்களின் குடும்பம் விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பி இருக்கிறோம். வீட்டில் கறவை மாடு, ஆடு, கோழிகளும் உள்ளன. கால்நடையின் மாட்டு சாணத்தில் இருந்து எரிவாயு தயாரித்து சமையலுக்கு உபயோகம் செய்யும் முறை குறித்து, 32 வருடத்திற்கு முன்னர் அதிகாரிகள் தெரிவித்தார்கள். முதலில் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னர், எங்களுக்கு அதில் உள்ள நன்மைகளை கூறி, அரசின் மானியம் மற்றும் கடனுதவி பெற்று தருவதாக கூறினார்கள். சோதனை முயற்சியாக எரிவாயு கலன் அமைக்கப்பட்டு, இன்று எவ்வித செலவும் இன்றி அதனை உபயோகம் செய்து வருகிறோம். கடந்த 32 வருடமாக எரிவாயுக்காக இதனையே உபயோகம் செய்கிறோம். வாரத்திற்கு 2 முறை மாட்டு சாணத்தை கரைத்து தொட்டியில் நிரப்பினால் போதும், எங்களுக்கு சமையல் செய்ய தேவையான எரிவாயு கிடைக்கிறது.
30 வருடத்திற்கு முன்னர் கூட்டுக்குடும்பமாக இருக்கையில் 2 வாரத்திற்கு ஒருமுறை சாணத்தை கரைத்து எரிவாயு கலனில் ஊற்றுவோம். தற்போது ஆட்கள் எண்ணிக்கை குறைந்ததால் வாரம் ஒருமுறை செய்துகொள்கிறோம். இதனால் வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் சேமிக்கப்படுகிறது. ஓரிரு கறவை மாடு, எருது வளர்க்கும் விவசாயிகளும், தொழிலாளர்களும் சிறிய கலனில் இதனை மேற்கொள்ளலாம். இயற்கை விவசாயம் தொடர வேண்டும் என்ற காரணத்தால், பொறியியல் பட்டம் பயின்ற மகன் சுரேஷ் குமாரை இயற்கை விவசாயத்திற்கு அனுப்பி இருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.