மனநலம் பாதிக்கப்பட்டு மாயமான கணவன்... மனைவியின் நெகிழ்ச்சி செயலால் நெஞ்சை உலுக்கும் பரிதவிப்பு.!
கணவரை காணவில்லை என ஒரு பெண் ஆட்டோவில் புகைப்படம் ஒட்டி ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகாமையில் முத்தம்பட்டி ஊராட்சி, முத்தம்பட்டி கேட் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சிவராமன் (வயது 44). இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும் வேலை செய்து வந்துள்ளார்.
இவரது மனைவி பழனியம்மாள். தம்பதிகளுக்கு கலைவாணி என்ற மகளும், ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில், சிவராமன் கடந்த 7ஆம் தேதி தனது வீட்டிலிருந்து வாழப்பாடி சென்று மீண்டும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த மனைவி தனது உறவினர்கள் வீட்டில் தேடியுள்ளார். இருப்பினும் அவர் கிடைக்காததால், கணவரை கண்டுபிடித்து தரும்படி வாழப்பாடி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில், வாழப்பாடி காவல்ஆய்வாளர் உமா சங்கர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றார். ஆனால் 19 நாட்கள் ஆகியும் தனது கணவர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால், கணவரை தேடி ஆட்டோ வாடகைக்கு எடுத்து, அதில் அவரது புகைப்படத்தை ஒட்டி ஒலிபெருக்கி மூலமாக அருகிலுள்ள கிராமங்களில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் கணவனைக் காணவில்லை என புகார் கொடுத்ததோடு நிறுத்திவிடாமல், அவர் மீதுள்ள பாசத்தில் மனைவி வீதி வீதியாக சென்று ஆட்டோவில் பிரசாரம் செய்து வருவது நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.