குவைத்தில் வேலைப்பார்த்து வந்த தமிழர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீழப்பட்டி ராசியமங்களம் கிராமத்தை சேர்ந்த மைக்கேல் ஜோசப்(எ)ஜெயராஜ்(45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் வேலைப்பார்த்து வந்தார். இன்று காலை மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவரான ஜெயராஜ், சிறுவயதிலிருந்தே விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார். விவசாயத்திற்கு தேவையான நிலத்தடி நீர் குறைந்து போகவே பிழைப்பைத் தேடி வெளிநாட்டிற்கு சென்றவர்களில் ஒருவர் ஜெயராஜ்.
குவைத்திற்கு சென்ற இவர் பர்வானியா பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இன்று காலை அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அரபு நாடுகளில் எண்ணெய் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் பலர் இதைப்போன்று மாரடைப்பால் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
இந்த சோகச் செய்தியை கேட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஜெயராஜிற்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களை பார்க்க அப்பா நிச்சயம் வருவார் என காத்திருந்த பிள்ளைகளுக்கு, அப்பா பிணமாக தான் வருகிறார் என்ற செய்தி பேரிடியாக அமைந்துள்ளது.
குவைத்தில் வேலைப்பார்த்து வரும் ஜெயராஜின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள், ஜெயராஜ் வேலைப்பார்த்து வந்த நிறுவனத்தின் உதவியுடன் அவரது உடலை சொந்த ஊரான ராசியமங்கலத்திற்கு கொண்டு வர முயற்சி எடுத்து வருகின்றனர்.