தூத்துக்குடி: பிளாக்கில் சரக்கு விற்பனை.. ஓசி மது கிடைக்காததால், காசு கொடுத்து குடித்தவர் கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்.!
மதுபானக்கடையில் பிளாக்கில் மதுபானம் வழங்காததால் ஆத்திரமடைந்த கும்பல், பிளாக்கில் மது வாங்கி குடித்த கட்டிட தொழிலாளியை கொடூர கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாடி தெருவை சேர்ந்தவர்கள் உதயமூர்த்தி (வயது 22), ராபின் (வயது 26), கண்ணன் (வயது 22). இவர்கள் அனைவரும் குடியரசு தினத்தில் மதுபானம் அருந்த விரும்பி, தூத்துக்குடி பி.இ சாலையில் உள்ள மதுபானக்கடையில் மதுபானத்தை திருடி இருக்கின்றனர். பின்னர், அங்கிருந்து 4 ஆவது இரயில்வே கேட், சின்னக்கண்ணுபுரம் மதுபான கடைக்கு சென்ற நிலையில், அங்கு பிளாக்கில் மதுபானம் விற்பனை செய்து கொண்டு இருந்த ராஜா என்பவரிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளனர்.
ராஜா மதுபானம் தர மறுப்பு தெரிவித்து, கல்லைத்தூக்கி வீசி 3 பேர் கும்பலை விரட்டியடித்துள்ளார். அங்கிருந்து ஆத்திரத்தில் புறப்பட்டு சென்ற கும்பல், சாலையில் ஓரமாக அமர்ந்து மதுபானம் அருந்திவிட்டு, மீண்டும் மதுபோதையில் சின்னக்கண்ணுபுரம் மதுபான கடைக்கு வந்துள்ளது. கடைக்கு வரும் வழியில் மற்றொரு நண்பரான பாத்திமா நகரை சேர்ந்த வினோத் என்ற தோக்லா வினோத்தை (வயது 35) சந்தித்துள்ளது.
இவர்கள் 4 பேரும் மதுபான கடைக்கு வருகை தந்த நிலையில், ராஜா அங்கு இல்லை. கட்டிட தொழிலாளியான செல்வராஜ் என்பவர் பிளாக்கில் மதுபானம் வாங்கி அருந்திக்கொண்டு இருந்துள்ளார். இதனைகவனித்து ஆத்திரமடைந்த கும்பல், எனக்கு கொடுக்காத மதுவை, நீ எப்படி காசு கொடுத்து வாங்கி குடிப்பாய்? என பிரச்சனை செய்து, செல்வராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
மேலும், மாடசாமி என்பவர் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்த நிலையில், அவரின் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கும்பல் தப்பி சென்றுவிடவே, காவல் துறையினருக்கு கொலை தொடர்பான தகவல் கிடைத்து, அவர்கள் உயிரிழந்த செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் உதயமூர்த்தி, ராபின் மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்த நிலையில், தலைமறைவான வினோத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.